Wednesday, June 10, 2009

"காதல் முத்து" ...(1)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்! தமிழ்ச் சேவை
இரண்டு! நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது நெஞ்சில்
நிறைந்தவை! நெஞ்சில் நிறைந்தவை நிகழ்ச்சியில்
அடுத்து
(பாடல்.....எங்கே நீயோ நானும் அங்கே
உன்னோடு..படம் நெஞ்சிருக்கும்வரை..பாடியவர் சுசீலா)

பாடலோடு பாடலாய் தன்கண்ணனின் கனவுகளோடு
கனவுகளாய், நினைவுகளோட தன்னை மறந்தவளாய்
இருந்தவள்,

"அம்மா! போஸ்ட்!" என்ற சத்தத்தைக் கேட்டவுடன்
அவசர அவசரமாக விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள்
அபிநயா!
"கனடாவில் இருந்து வந்திருக்கம்மா தபால்" என்ற
போஸ்ட்மன் குரல் அவளுக்கு கேட்டிருக்க நியாயமில்லை!
அவள் கைகளில் தபால் கிடைத்ததும்தான் அவள்
துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட்டாளே! அத்தனை
சந்தோசம் அவளுக்கு!

எத்தனை நாள் காத்திருந்திருந்திருப்பாள், இந்தக்கடிதத்தை
எதிர்பார்த்த வண்ணம்! நித்தம் நித்தம் போஸ்ட்மனை
"ஏதாவது தபால் வந்திருக்கா! ஏதாவது தபால் எனக்கு
வந்திருக்கா!" என்று கேற்றடியில் முன்கூட்டியே
வந்து காத்திருந்து, எத்தனை நாள் விழி பூத்திருந்து
காத்திருந்திருப்பாள்!
போஸ்ட்மனும்
"வரேல்லையம்மா! வரேல்லையம்மா!" என்று
கூறிக் கூறிக் களைத்துப் போயிருப்பான்!
அவளோ சலிக்காமல் தினம் தினம் தவம் இருந்து
தவித்துப் போயிருப்பாள்!

ஆனால், இன்று அவளுக்கு ஆச்சரியம்!
காலையில் கண்விழிக்கும்போது மனம் அவளை
அறியாமல் "இன்று எப்படியும் உனக்கு ஒரு நல்ல
சேதி கிடைக்கும்" என்று அவளுக்கு அவள் உள்
உணர்வு கூறியதுஉண்மைதான்!

அவளுக்குள் ஓர் பரபரப்பு இருந்துகொண்டே இருந்தது!
அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் செய்து
கொண்டு அவள் கைகால்கள் இருந்தாலும்,
மனம் என்னவோ அந்தத் துடிப்போடு தவிப்போடு
நீண்ட மைல்களுக்கப்பால் பயணம் செய்தபடியே
இருந்திருந்தது!

நம் மனம், ஒலியின் ஒளியின் வேகங்களையெல்லாம்
கடந்து உலகத்தையே ஒரு நொடிப்பொழுதில்
சுற்றி வந்து விடுகிறதே!
எத்தனையோ சக்தி வலுக்கொண்ட மனந்தான்,
நொடிப்பொழுதில் துவண்டும் விழுந்து விடுகிறதே!

தொடரும்..

No comments:

Post a Comment