Wednesday, June 10, 2009

காதல் முத்து (3)

எடுத்துவந்த சாப்பாட்டை கையில்வைத்திருந்தபடி,
உட்கார்ந்து மனத்தினால் உணர்வினால் கலந்து
தன் கண்ணனுக்கு ஊட்டுவதாக நினைத்துக்
கொண்டாள்!
ம்..சாப்பிடுங்கள்! என்று மனதால் அவனுக்கு ஊட்டிக்
கொண்டாள்!
அவள் மனத்திற்குள் அவனோடு சேர்ந்து இருந்து
சந்தோஷிப்பதாகவே, அவள் மனம், உடல் உணர்வுகள்
பேசிக்கொண்டது!
நிறையவே ஊட்டினாள்!
அவனும் அவளுக்கு ஊட்டுவதாகவே அவள் உள்
உணர்வு கூறியது!
அன்றொருநாள் யாருமற்ற தனிமையில் அவள் இருந்த
போது அவன் அவளுடன் செய்த குறும்புகள்
ஒவ்வொன்றாய் அவள் ஞாபகத்திற்கு வந்தது!

மடிமீது சாய்ந்திருந்து அவன் பேசிய அன்பான
தென்றலின் ஸ்பரிஸங்கள், வருடல்கள், அதை
இப்போது சந்திப்பதாக உணர்ந்தாள்!
(பாடல் பூக்கொடியின் புன்னகை..பாடியவர் சந்தியா..
படம் இருவர்)

'பிரிவு' என்ற உணர்வே இல்லாது ஒன்றுடன் ஒன்று
உயிர்கலந்து பின்னிப்பிணைந்து, முத்தங்கள்
கலந்து நிறைந்திருக்கும் நிலையில், தன்னை
மறந்திருந்தாள் அவள்!
இல்லையில்லை! அவர்கள் இருவரும் தம்மை
மறந்து மயங்கிய நிலையில் இருந்தார்கள்!
என்பதுதான் உண்மை!


மனதோடு உணர்வோடு பின்னிப் பிணைந்த காதல்
கணப்பொழுதும் பிரியாத உணர்வுகளின் புரியாத
புதிராக மற்றவர்க்கு இருந்தாலும்,

புனிதமான தூய்மையான உணர்வுக்குள் இணைந்து
பிணைந்த காதலர்க்கு, அது புதிரல்ல! புதுமையல்ல!
ஆழ்கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து! அது
உண்மைக்காதலர்தம் காதல்முத்து!


நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
11-8-2005

காதல் முத்து (2)

எதிர்பார்ப்புக்களோடு இருக்கின்றபோது துடித்துக்
கொண்டிருக்கும் மனது, எதிர்பார்ப்பு ஏமாற்றமானால்
சட்டென்று சாய்ந்துவிடுகிறதே!
'வலிமைகளில் பெரியது மனோ வலிமை' என்பார்கள்!
அந்த வலிமை பெற்றவர்கள் "இரக்கமில்லாதவர்கள்"
என்று பெயர் சூட்டப்பட்டு விடுகிறார்களே!

இழகிய மனது எவ்வளவு ஆபத்துக்களைச் சந்திக்கிறது!
பழகிய மனங்களைப் பார்த்தால், அந்த மனங்கள்
எத்தனை சோதனைகளை எதிர்நோக்குகிறது!
அந்த நல்மனங்கள், எத்தனை துன்பங்களை
சுமக்கிறது!
"அதனால்தான் பலரும் உலகில் கல்மனங்களாக
தங்களை மாற்றியிருக்கிறார்களோ! உதவி செய்து
உபத்திரவத்தைத் தேடிக்கொள்வதைவிட
உதவியும் வேண்டாம்! உபத்திரவமும் வேண்டாம்"

என்று மனிதமனங்கள் தங்களை மாற்றிக்கொண்டு,
இரக்கத்தை மறந்த நிலையில் இருப்பதற்கு
காரணம் இதுதானோ! என்ற சந்தேகம் இன்றும்
பலமனங்களில் உலாவுகிறதே! தாமும்
அவ்வாறு மாறவேண்டும் என்ற நினைப்புக்கு
வழி வகுத்துவிடுகிறதே!

மனிதமனங்களின் கோலங்கள் அப்படி!
அந்த வகையில் அபிநயா வித்தியாசமானவள்தான்!
நம்பிக்கையிழக்காத அவள் மனத்திற்கு, மேலும்
நம்பிக்கையூட்டிய அந்த எதிர்பார்ப்பு!

எல்லாவற்றையும் விட அவள்மன உணர்வின்
உந்துசக்தி, எத்துணை சக்தி வாய்ந்தது!
வரப்போகும் செய்தியை முன்கூட்டியே
தெரிவித்த அவள் உள்ளுணர்வு உண்மையில்
அபூர்வமானதே!

போஸ்ட்மன் வழமைக்கு மாறாக வேளைக்கே
இன்று வந்து, அவளை இன்னும் ஆச்சரியத்தில்
அல்லவா வைத்துவிட்டான்!

அந்தக்கடிதத்தை 'அப்பா அம்மா இல்லாத
நேரம் கிடைக்கவேண்டும்' என்று, எத்தனை
கோயில்களில் நேர்த்திக்கடன் வைத்திருப்பாள் அவள்!

அவளையும் மீறிய பிராத்தனை நிறைவேறிய
நன்றிப்பெருக்கோடு, கடிதத்தையுடைத்தவளுக்கு,
அவள் அன்புக்குரியவனின் அழகிய கையெழுத்து
ஆனந்தத்தையும் அவனது அன்புப் பெருக்கையும்
கொடுத்தது!

"அடி கள்ளி அபி! எப்படி இருக்கிறாயடி!
எனக்குத் தெரியும்! நீ துரும்பாய் இளைத்திருப்பாய்!
உன் தவிப்பைத்தான் துடிப்பைத்தான் எனக்கு
நல்லாய்த் தெரியுமே!

அடி கள்ளி! கோவிச்சுக்காதை!
உன் நல்லமனதுக்கு உனக்கு ஒருகுறையும் வரக்
கூடாது! நீதான் அடிக்கடி சொல்வாயே!
"என்கண்ணனுக்கு ஒருகஸ்ட்டமும் வராது!
என் கண்ணனின் நல்லமனம்போல் எல்லாம் நடக்க
வேண்டும்" என்று ஒவ்வொரு கோயிலிலும்
நீ எனக்காக வேண்டிக்கொண்டது எனக்குத்
தெரிந்ததுதானேடி!

உன் நல்லமனது வேண்டியபடி எத்தனையோ
கஸ்ட்டங்கள் என்கூட வந்தவர்க்கு! ஆனால்
பிளைட் ஏறியதிலிருந்து இங்கு வந்து இறங்கியது
வரை எந்தப்பிரச்சனையும் எனக்கு இல்லையடீ!

என்கூடவந்தவங்கள் ஆச்சரியத்தோடு என்னைக்
கேட்டாங்க! 'அதெப்படிடா! உனக்குமட்டும் எந்தப்
பிரச்சனையும் தராம விட்டுட்டாங்க! எங்களையெல்லாம்
பிய்த்து எடுத்திட்டாங்க!'

என்று கேட்டான்க! "அதெல்லாம் என் அபியின்
ராசியடா! அவள் தெய்வ நம்பிக்கையடா!"என்று
பெருமையாய்ச் சொல்லிக்கொண்டேனடி!
உண்மையாக நான் எந்தவிதக் கஸ்ட்டங்களையும்
சந்திக்கவில்லையடி! எல்லாம் உன் உண்மையான
அன்புதானடி!

அபி! அடிக்கள்ளி! நான் உண்மையில்
உன்னன்பைப் பெறக் கொடுத்துவைத்தவனடி! யேஸ்!
ஐ ஆம் லக்கிப்வெலோ! தாங்ஸ் கோட்! தாங்ஸ்!
எனக்கு என் அபி பக்கத்தில் வேணும்!

என்கூட நீ என்றும் வேண்டுமடி! அபி அடிக்கள்ளி
என்றும் நீ என்னுடன் வேண்டுமடி!
இந்தக்கடிதத்தை ஏயர்போட்டால் வந்தவுடனும்
எழுதுகிறேனடி!

மற்றவங்க என்னைச் சொன்னாங்க! "வந்த களைமாற
சாப்பிடடா! பிறகு உன் லவ்வருக்கு கடிதம் எழுதலாம்!
அவள் அதற்கிடையில் ஒன்றும் குறைஞ்சுபோயிட
மாட்டாள்" என்றாங்க!

அவங்களுக்குத் தெரியுமா என் அபியைப்பற்றி!
போங்கடா! நீங்க போய்ச்சாப்பிடுங்க! நான் கடிதம்
எழுதி அவளுக்கு அனுப்பிப் போட்டுத்தான் அடுத்த
வேலை! என்று சொல்லிப்போட்டு இதை
உனக்கு எழுதுகிறேனடீ!

இப்பவே இது உனக்குக்கிடைத்து நீ வாசிக்க
வேணும் என்று மனம் அந்தரப்படுகுதடீ!
அபி! அடிகள்ளி! பிளீஸ்! நல்லாய் உடம்பைப்
பார்த்துக்கோ! நேரத்துக்கு நேரம் சாப்பிடு!
விரதம் கிரதம் என்று உடம்பைக் கெடுத்துக்
காதையடீ!

நான் சொல்லிறது எல்லாம் கேட்பாய்! இந்த
விடயத்தில நல்லாய் அடம்பிடிப்பாய்!
கேட்டா "என் கண்ணனுக்காக எதையும் நான்
செய்யுறன்! இதைமட்டும் கேட்காதையுங்க!
பிளீஸ்!"என்பாய்!
என்ன சொல்றது! உன்னை நீ பார்த்துக்கோடி!
எனக்காக! வீணாய் வருத்தத்தைத் தேடாதை!
கவலைப்படாதை! நான் இங்கை வேளா வேளைக்கு
ஏதாவது கொட்டிக்கொள்வேன்!
இவன் சசியின் அண்ணன் வீட்டில்தான் இப்ப
நிக்கிறோம்! அவங்கள் நல்லவங்க!
என்ரை தவிப்புத் தெரிந்து அவனுடைய அண்ணிதான்
எனக்குப் பேப்பரும் பேனையும் தந்து
"நீ எழுதிப்போடு தம்பி!" என்று தந்தா!

நல்லவங்களடி! மனதுக்கு உன்னை நினைத்தால்தான்
சரியான கவலையாய் இருக்கடி!
பிளீஸ்! உனக்குள் இருக்கும் எனக்காக சாப்பிடடீ!
பட்டினி கிடக்காதை! என்ன! அச்சாப்பிள்ளைதானே!
உடம்பைப் பார்த்துக்கோ! சந்தோசமாயிரு!
கவலைப்படாதை!
எழுத எழுத நிறைய எழுதவேணும் போலையிருக்கடி!

றேடியோவில் ஒரு பாட்டுப்போகுதடி! நீ
அடிக்கடி உன் மடியில் என்னை வைத்து தலையை
வருடிக் கொண்டு பாடுவாயே!
"பூக்கொடியின் புன்னகை.... அந்தப்பாடல்
போகுதடி!
இப்ப உன் மடியில் நான் இருக்கவேணுமடி அபி!
நீ என்னைத்தாலாட்ட வேண்டுமடி! எனக்கு நீ
வேண்டுமடி அபி!
இந்தக் கடிதத்தை நீ படித்தவுடன் என்னை உன்
மடியில் வைத்துத் தாலாட்டுவாய்தானே!
நீதான் அடிக்கடி சொல்வியே! "நான் உங்கள்
உணர்வோடு கலந்தவள்! உங்கள் கூடவேதான்
என்றும் இருப்பேன்! உங்களையும் என்னையும்
யாரும் பிரிக்கமுடியாது" என்பாய்!
"மனதாலும் நினைவாலும் நான் உங்கள்கூடத்தான்
கண்ணா!" என்பாய்!

இப்ப இதைப்படித்து முடித்தகையோடு நீ சாப்பிட
வேண்டும் புரியுதா! அதன்பிறகு என்னைத்தாலாட்டடி!
நான் உன் மடியில் படுத்திருப்பேன்! எனக்கும்
ஊட்டவேண்டும் புரியுதா!

சரி! சரி! எனக்காக எனக்குள் இருக்கும் கள்ளி!
இப்ப சந்தோசமா! கடிதம்பார்த்ததும் எவ்வளவு
சந்தோசப்படுவாய்! என்று எனக்குத்தெரிந்ததுதானே!

அங்கை யார்கையிலும் இந்தக்கடிதம் கிடைக்கக்
கூடாது! என் அபியின் கையில் கிடைக்கவேண்டும்!
என்று உன் இறைவன் கண்ணனைத்தான் வேண்டுகிறேன்!
அங்கை உனக்கு எந்தக் கஸ்ட்டமும் வரக்கூடாது!

தைரியமாய் இரம்மா! சந்தோசமாயிரு! சரியா!
சரி சரி! சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம்
தூங்குவோமா! மிகுதி பின்!
பதில் போடடி! பதில் போடு!
அன்பு நிறை இனிய இதழ்முத்தங்களுடன்
உன் கண்ணன்!


மூச்சுவிடாமல் கடிதத்தை வாசித்துவிட்டு
யேஸ்! யேஸ்! "கண்ணா நன்றியடா! நன்றி!" என்று
சாமியறைக்கு ஓடி வந்து விழுந்து கும்பிட்டுக்
கொண்டாள்!

அவள் கண்களில் இருந்து "பொல பொல" நீர்
அவளையும் அறியாமல் ஆண்டவனுக்கு அபிஷேகம்
செய்தது!
"என் கண்ணனுக்கு எந்தவித கஸ்ட்டங்களும்
கொடுக்க்கூடாது" என்று அந்த ஜீவன் அவனுக்காக
இறைஞ்சியது! "எங்களை இணைத்து வை
இறைவா!" என்று மானசீகமான மன்றாட்டமாக அவள்
இறைஞ்சினாள்!

மனம் அவனுக்காய் ஏங்கியது!
(பாடல்..பார்த்துப்பார்த்து கண்கள் பூத்திருப்பேன்...
சித்திரா பாடியது..படம் நீ வருவாய் என)


மதியத்தை நேரம் நெருங்கியபோதும்,
அவள் மனம் 'கனடாவில் இப்ப நள்ளிரவுதானே!'என்றது!
ஆக்கிய சோறு கறிகளைக் ஒரு கிண்ணத்தில்
எடுத்துக்கொண்டாள்!

நல்லவேளை! வீட்டில் யாரும் இல்லை!
அப்பா அம்மா கோயிலில் இருந்து திரும்பிவர
நேரமாகும்! பஸ்பிடித்து வர நேரம் எடுக்கும்!

நல்லவேளை! அப்பா கேட்டபடி நானும் கோயிலுக்குப்
போயிருந்தால் என் கண்ணனின் கடிதத்தைப்
பார்த்திருக்கச் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்திருக்கும்!

ஏனோ "நான் வரல்லையப்பா! நீங்கள் போயிட்டு வாங்க!"
என்று சொல்லிக்கொண்டாள்!

அவளையும் மீறி அவள் உள்ளுணர்வு பேசியதே!
வழமையாக அவள் கோயிலுக்கு அப்பா அம்மா
வரும்படி கேட்டால் எந்தவித மறுப்பும் சொல்லாமல்
போகிறவள்தான்! ஆனால் இன்று ஏனோ மறுத்தது
அவள் மனம்!

எவ்வளவு நல்லதாய்ப் போய்விட்டது! தந்தையின்
பார்வையில் அவள் வரமறுத்தது கேள்விக்குறியாகி
இருந்ததை, அவள்பார்க்கத் தவறவில்லைத்தான்!

ஆனாலும், அதைவிட அவள்மனம் மறுத்ததன் அர்த்தம்
இப்போதல்லவா அவளுக்கு தெரிந்திரு;க்கிறது!


தொடரும்..

"காதல் முத்து" ...(1)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்! தமிழ்ச் சேவை
இரண்டு! நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது நெஞ்சில்
நிறைந்தவை! நெஞ்சில் நிறைந்தவை நிகழ்ச்சியில்
அடுத்து
(பாடல்.....எங்கே நீயோ நானும் அங்கே
உன்னோடு..படம் நெஞ்சிருக்கும்வரை..பாடியவர் சுசீலா)

பாடலோடு பாடலாய் தன்கண்ணனின் கனவுகளோடு
கனவுகளாய், நினைவுகளோட தன்னை மறந்தவளாய்
இருந்தவள்,

"அம்மா! போஸ்ட்!" என்ற சத்தத்தைக் கேட்டவுடன்
அவசர அவசரமாக விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள்
அபிநயா!
"கனடாவில் இருந்து வந்திருக்கம்மா தபால்" என்ற
போஸ்ட்மன் குரல் அவளுக்கு கேட்டிருக்க நியாயமில்லை!
அவள் கைகளில் தபால் கிடைத்ததும்தான் அவள்
துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட்டாளே! அத்தனை
சந்தோசம் அவளுக்கு!

எத்தனை நாள் காத்திருந்திருந்திருப்பாள், இந்தக்கடிதத்தை
எதிர்பார்த்த வண்ணம்! நித்தம் நித்தம் போஸ்ட்மனை
"ஏதாவது தபால் வந்திருக்கா! ஏதாவது தபால் எனக்கு
வந்திருக்கா!" என்று கேற்றடியில் முன்கூட்டியே
வந்து காத்திருந்து, எத்தனை நாள் விழி பூத்திருந்து
காத்திருந்திருப்பாள்!
போஸ்ட்மனும்
"வரேல்லையம்மா! வரேல்லையம்மா!" என்று
கூறிக் கூறிக் களைத்துப் போயிருப்பான்!
அவளோ சலிக்காமல் தினம் தினம் தவம் இருந்து
தவித்துப் போயிருப்பாள்!

ஆனால், இன்று அவளுக்கு ஆச்சரியம்!
காலையில் கண்விழிக்கும்போது மனம் அவளை
அறியாமல் "இன்று எப்படியும் உனக்கு ஒரு நல்ல
சேதி கிடைக்கும்" என்று அவளுக்கு அவள் உள்
உணர்வு கூறியதுஉண்மைதான்!

அவளுக்குள் ஓர் பரபரப்பு இருந்துகொண்டே இருந்தது!
அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் செய்து
கொண்டு அவள் கைகால்கள் இருந்தாலும்,
மனம் என்னவோ அந்தத் துடிப்போடு தவிப்போடு
நீண்ட மைல்களுக்கப்பால் பயணம் செய்தபடியே
இருந்திருந்தது!

நம் மனம், ஒலியின் ஒளியின் வேகங்களையெல்லாம்
கடந்து உலகத்தையே ஒரு நொடிப்பொழுதில்
சுற்றி வந்து விடுகிறதே!
எத்தனையோ சக்தி வலுக்கொண்ட மனந்தான்,
நொடிப்பொழுதில் துவண்டும் விழுந்து விடுகிறதே!

தொடரும்..